டெல்லி: பிரதமர் மோடி ஜூன் 8ந்தேதி (சனிக்கிழமை) மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது. மோடி, தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அத்துடன் தற்போதைய 17வது மக்களவையை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று 18வது மக்களவை அமைக்கப்பட வேண்டும். இதனால் 18வது மக்களவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்து வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இண்டியா கூட்டணி 232 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் தனித்து 240 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி வெறும் 99 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளது. மத்திய ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகள் எந்தவொரு கட்சிக்கும் கிடைக்காத நிலையில், அதிக இடங்களை கைப்பற்றிய பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் 28கட்சிகளை கொண்ட இண்டியா கூட்டணியும், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகளை இழுத்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் இன்று காலை 11.30 மணி அளவில் பிரதமர் மோடி இல்லத்தில், அவரது தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்பட கேபினட் அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில், தேர்தல் முடிவுகள் மற்றும் ஆட்சி அமைப்பது, கூட்டணி கட்சிகளுக்கு பதவிகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து 17வது மக்களவையை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் நடவடிககை தொடங்கி உள்ளது.
இதனை தொடர்ந்து இன்று மாலை பாஜக கூட்டணி கட்சி கூட்டம் நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற பாஜக திட்டமிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து குடியரசுத் தலைவரை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வரும் 8ந்தேதி பிரதமர் மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.