டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இன்று மாலை கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக்குபிறகு, குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோர உள்ளதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
18வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்து வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இண்டியா கூட்டணி 232 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் தனித்து 240 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி வெறும் 99 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளது. மத்திய ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளில் எந்தக் கட்சியும் வெற்றி பெறாததால், பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க முன்வருகிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் காலை 11.30 மணி அளவில் கூடியது. பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்பட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில், தேர்தல் முடிவுகள் மற்றும் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மத்தியில் தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், மோடி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. மேலும், இந்த கூட்டத்தில் அமைச்சரவை மற்றும் 17வது மக்களவையை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து பாஜக கூட்டணி கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற பாஜக திட்டமிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து குடியரசுத் தலைவரை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.