சென்னை
அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வடதமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது. தற்போது தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், தருமபுரி, கரூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.