மும்பை வடமேற்கு நாடாளுமன்ற தொகுதியில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சி சார்பில் போட்டியிட்டு 48 வாக்குகளில் வெற்றிபெற்றவர் ரவீந்திர வைக்கர்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதி ரவீந்திர வைக்கரின் உறவினர் மங்கேஷ் பாண்டில்கர் கோரேகானில் உள்ள NESCO வாக்கு எண்ணும் மையத்திற்குள் மொபைல் போன் பயன்படுத்தியதாகப் புகார் எழுந்தது.

வாக்கு எண்ணும் மையத்தில் மொபைல் போனுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தும் பாண்டில்கர் செல்போன் பயன்படுத்துவதை சுயேச்சை வேட்பாளர் ஒருவர் பார்த்து தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் வன்றை போலீசாரை தொடர்பு கொண்டார்.

வன்றை போலீசார் நடத்திய விசாரணையில் பாண்டில்கர் செல்போன் பயன்படுத்தியது உறுதியானது. இதனையடுத்து அவரது செபோனை பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த மொபைல் போன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திறக்க உதவும் OTPயைப் பெறுவதற்கு பதிவு செய்யப்பட்ட எண் என்று குற்றம்சாட்டப்பட்டது.

மின்னணு தபால் வாக்குகள் பதிவு செய்யும் இயந்திரத்தையும் இந்த மொபைல் போன் மூலம் திறக்க முடியும் என்றும் கூறப்பட்டது. தவிர, வாக்கு எண்ணிக்கையில் ரவீந்திர வைக்கர் பின்னிலையில் இருந்த நிலையில் மின்னணு தபால் வாக்குகள் மூலமே அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்து 48 வாக்குகளில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதனால் EVM-ஐ திறக்க உதவும் மொபைல் போன் மூலம் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்ததது இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனை காவல்துறையினர் அதை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக மங்கேஷ் பாண்டில்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் OTPயைப் பெறுவதற்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் பாண்டில்கர் கைக்கு சென்றது எப்படி என்பது குறித்து வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

EVM மோசடி குறித்து சிவசேனா எம்.பி. ரவீந்திர வைக்கரின் உறவினர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.