ஜம்மு: இந்து வலதுசாரி அமைப்புகள் ஜம்முவில் ஊர்வலம் நடத்தியதையொட்டி, மொபைல் மற்றும் இணைய சேவைகள் ஜம்முவில் மீண்டும் முடங்கியுள்ளன.
தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று நிர்வாக தரப்பில் சொல்லப்பட்டாலும், வலதுசாரி அமைப்புகளின் ஊர்வலம்தான் காரணம் என்று உள்ளூர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் போன்ற அமைப்புகள், ஜம்முவில் மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்தின. எனவே, இதனைத் தொடர்ந்து வன்முறைகள் எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்தவாரம் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மொபைல் மற்றும் இணைய சேவைகள் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டன.
அம்மாநிலத்தில் தற்போதைய நிலையில் சுமார் 400 அரசியல் தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மாறும் நிலவரத்தைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.