மராவதி

ந்திரா மாநிலத்தில் மின்னல் தாக்கும் அபாயம் குறித்து மொபைல் செயலி மூலம் செய்தி அனுப்பப்பட்டு பல உயிர்கள் காக்கப்பட்டுள்ளன.

ஆந்திராவில் மழை அதிகம் பெய்வது போல மின்னல் தாக்கி மரணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகம் ஆகும்.  கடந்த 2017 ஆம் வருடம் ஜூலை மாதம் முதல்வர் சந்திரபாபு நாயுடு மின்னல் பாதையை கண்டுபிடிக்கும் செயலி ஒன்றை அறிமுகம் செய்தார்.  அந்த செயலியை சித்தூரில் உள்ள குப்பம் பொறியியல் கல்லூரி மாணவர்களும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமும் சேர்ந்து மேம்படுத்தினார்கள்.   வஜ்ரா என அந்த செயலிக்கு பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் சூழ்ந்திருந்த மேகங்களால் சுமார் 41,025 மின்னல்கள் உண்டாகி இருந்தன.   இந்த செயலி மூலம் ஆந்திரப் பிரதேச பேரிடர் மேலாண்மைக் கழகம் இந்த மின்னல் எங்கெங்கே உண்டாகும் என கண்டறிந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.   இதனால் மக்கள் மின்னல் தாக்குதலில் இருந்து தப்பி பத்திரமான இடங்களுக்கு சென்றுள்ளனர்

இது குறித்து ஆந்திரப் பிரதேச பேரிடர் மேலாண்மைக் கழகம், “வஜ்ரா என்னும் இந்த செயலி மூலம் நாங்கள் சுமார் 20.14 லட்சம் மொபைல்களுக்கு எச்சரிக்கை தகவல்கள் அனுப்பி வைத்தோம்.   இதனால் பல மக்கள் காப்பாற்றப் பட்டுள்ளனர். தற்போது இந்த செயலி பி எஸ் என் எல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.  அதை  அனைத்து மொபைல்களிலும் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளது.