புதுச்சேரி துணை சபாநாயகர் பதவிக்குப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் பாலன் பதவியேற்றுக் கொண்டார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் காலியாக உள்ள சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று (செப்.5) நடைபெறும் எனவும், போட்டியிட விரும்புவோர் வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம் எனவும் சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இதையடுத்து, நேற்று சட்டப்பேரவைச் செயலர் வின்சென்ட் ராயரிடம் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சட்டப்பேரவை உறுப்பினர் பாலன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வேட்பு மனுத்தாக்கல் செய்யும்போது முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் உள்ளதால் எதிர்க்கட்சி சார்பில் துணை சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதி நேரம் பகல் 12 மணிவரை வேறு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால் எம்.என்.ஆர் பாலன் போட்டியின்றித் தேர்வானார். யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாத சூழலில், பாலன் சட்டப்பேரவைக்குள் இருந்த எம்எல்ஏக்கள் அனைவருக்கும் கைகுலுக்கி தனது மகிழ்வை வெளிப்படுத்தினார். அவர் இன்று பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பாலன் மட்டும் வேட்பு மனுத்தாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளாதக இன்று சபாநாயகர் சிவகொழுந்து சட்டப்பேரவையில் அறிவித்தார்.
புதிய துணை சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்ட பாலனை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் துணை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.