சென்னை: எட்டா உயரத்தில் எரிவாயு விலை எப்படி வைப்பார் ஏழைகள் உலை? ரூ.1,000-த்தை தாண்டியது சிலிண்டர் விலை, மக்களின் கதறல் காதில் விழுகிறதா? என மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.1,000-த்தை தாண்டியது சிலிண்டர் விலை, மக்களின் கதறல் காதில் விழுகிறதா? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,000-த்தை தாண்டிவிட்டது. ‘‘எப்படி சமைப்பது எப்படி பிழைப்பது’’ என்று புலம்புகின்றனர் ஏழை எளிய நடுத்தர மக்கள்.
ஏற்கனவே பார வண்டிபோல அன்றாட வாழ்க்கையை மிகுந்த சிரமத்துடன் சுமந்து செல்லும் பொதுமக்களை, இந்த விலை உயர்வு மேலும் அதிர்ச் சிக்கு உள்ளாக்கிவிட்டது. காஸ் அடுப்பை பற்றவைக்கும் போதெல்லாம் மக்கள் அதன் விலையை நினைத்து வேதனை கொள்கின்றனர். சிலிண்டருக்கான மானியத் தொகை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று மன்மோகன் சிங் அரசு அறிவித்தபோது, இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்துப் போர்க்கோலம் பூண்டது அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக. அன்று சிலிண்டருக்கு மாலை அணிவித்து, பாடை கட்டிப் போராடிய பாஜக-வினர் இப்போது வாய் மூடி மௌனமாக இருக்கின்றனர்.
தங்கள் மீதான பழியைச் சுமக்க விரும்பாத மத்திய பாஜக அரசு, பெட்ரோல், டீசல் விலையைத் தீர்மானிக்கும் உரிமையை பெட்ரோலிய நிறுவனங்களிடமே கொடுத்துவிட்டது. ஆனால், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? 2019 ஏப்ரல் மாதம் ஒரு சிலிண்டர் ரூ.722-க்கு விற்கப்பட்டபோது, மானியமாக ரூ.238 வழங்கப்பட்டது. ஆனால், இந்த மானியம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, தற்போது ரூ.25 கூட கிடைப்பதில்லை. அதுவும்கூட பலரது வங்கிக் கணக்கில் வந்து சேரவில்லை என்று குமுறுகின்றனர் பொதுமக்கள். சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று காரணம் கூறி, காய்ந்த சுள்ளிகளை வைத்து அடுப்பு எரித்துக்கொண்டிருந்த லட்சக்கணக்கானோருக்கு இலவசமாக எரிவாயு இணைப்பை கொடுத்தவர்கள், இப்போது சப்தமில்லாமல் விலையை உயர்த்திக் கொண்டே போகிறார்கள். ரூ.965-க்கு விற்ற சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.1,015-ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்தால் விலை உயர்ந்தது என்று காரணம் கூறும் பெட்ரோலிய நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஏன் குறைக்கவில்லை?
தற்போது உணவுகூட இல்லாமல் தவிக்கும் இலங்கை மக்களின் பரிதாப நிலையும், பொருளாதார வீழ்ச்சியும் சிலிண்டர் விலை உயர்வில் இருந்துதான் தொடங்கின. அந்த நிலை இந்தியாவுக்கும் வந்துவிடக் கூடாது. உடனடியாக சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்து, விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்காவிட்டால் மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களைத் தவிர்க்க முடியாது’.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.