பாட்னா:
பீகார் மாநிலத்தில் முழு மது விலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை அவ்வப்போது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி பிடித்து வருகின்றனர். இந்த வகையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட 9 லட்சம் லிட்டர் மதுவகைகளை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
இவ்வாறு பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த பாட்டில்களில் இருந்து மதுக்களை எலிகள் குடித்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடந்த மாநில காவல்துறையினர் ஆலோசனை கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் சில மதுவகைகளை போலீசார் அழித்துவிட்டதாகவும், மீதமிருந்ததை எலிகள் குடித்துவிட்டன என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் மீடியாக்களில் செய்தியாக வெளிவந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த பாட்னா மண்டல ஐஜி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் டிஜிபி சிங்கால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மது குடித்ததாக பீகார் மாநில ஆண் போலீஸ் சங்க தலைவர் நிர்மல் சிங், உறுப்பினர் சாம்சர் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு வரும் 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் முழு மதுவிலக்கை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தார். அப்போது முதல் காவல் துறையினரும், கலால் பிரிவு அதிகாரிகளும் மது விற்பனை தொடர்பான சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.