பெய்ஜிங்:

சீன பிரதமராக லி கெகியாங் இன்று மீண்டும் நியமனம் செய்யப்பட்டார். அமைச்சரவையும் இன்று பதவி ஏற்றது. இதில் ஏவுகணை வல்லுனர் ராணுவ அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எல்லையில் அண்டை நாடுகளின் பிரச்னை மற்றும் பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் ஆகியவற்றை இவர் தான் கையாளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அமைச்சரவைக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், தேசிய மக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹன் ஜெங், சன் சுன்லான், ஹூ சுன்ஹா, லியூ ஹீ ஆகியோர் துணை பிரதமர்களாக பதவி ஏற்றுள்ளனர்.

பிரதமர் பரிந்துரை செய்த இவர்களின் பெயர்களுக்கு கட்சியின் 3 ஆயிரம் பிரதிநிதிகள் ஒப்புதல் அளித்தனர். ஜீ ஜீன்பிங் கடந்த வாரம் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதைதொடர்ந்து அடுத்த 5 ஆண்டகளுக்கு தன்னை பிரதமராக லீ கெகீயாங் நியமனம் செய்து கொண்டார்.

அதிபரின் நெருங்கிய நண்பரான ஊழல் தடுப்பு பிரிவு முன்னாள் தலைவர் வாங் குயிஷன் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டார். துணை பிரதமர் லியூ சீனாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை சீனா கொண்டுள்ளது.

வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முக்கிய பதவியாக கருதப்படும் ராணுவ அமைச்சராக ஓய்வு பெற்ற ஜெனரல் வேய் பெங்கி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சீனா ராணுவத்தின் நவீன மயமாக்கல் மற்றும் மறுசீரமைப்பில் சர்வதேச அளவில் பணியாற்றியவர். போர் திறன் சார்ந்த ஏவுகணை படையை இரண்டாக பிரித்து ராக்கெட் படை மற்றும் போர் திறன் சார்ந்த ஆதரவு படை என மாற்றி அமைத்தார்.

சென் வென்குயிங், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு அமைச்சராகவம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு மத்திய வங்கியின் கவர்னராக யீ கேங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 15 ஆண்டுகள் கழித்து முதன் முறையாக இப்பதவிக்கு புதிய நபர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறந்த அரசு நிர்வாகத்தை வழங்கும் வகையில் அமைச்சரவை பெரிய அளவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று சீன அரசு தெரிவித்துள்ளது.