சபரிமலை:

கேரள மாநிலம் சபரிமலையில் புதிய தங்க கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அடையாளம் தெரியாத நபர்கள் அமிலம் வீசினர். பத்தினந்திட்டை மாவட்டம் ரான்னி காட்டில் இருந்து தேக்கு மரம் தேர்வு செய்யப்பட்டு பூஜைகளுக்கு பின் கொடி மரம் செதுக்கப்பட்டது. 9 ஆயிரத்து 200 கிலோ தங்கம் தகடுகளாக மாற்றப்பட்டு கொடிமரத்தில் பதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 3.60 கோடியாகும்.

காலை 11.50 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடி மர பீடத்தில் பிரதிஷ்டை சடங்குகளை நடத்தினார். பூஜைகள் முடிய மதியம் 1.40 மணி ஆனது. தங்க கொடி மர பிரதிஷ்டையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். பூஜை முடிந்து பக்தர்கள் கலைந்து சென்ற பின்னர் கொடி மரத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் பாதரசம் வீசி சேதப்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் தங்க கொடி மரத்தின் நிறம் மாறி இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த தேவஸ்தான அதிகாரிகள் இது குறித்து உடனடியாக போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து வந்து சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டனர். ஆனால் அதில் பிரதிஷ்டையின் போது சிலர் கொடி மரத்தின் அருகில் செல்வது போல் தெரிகிறது. ஆனால், காட்சிகள் தெளிவாக இல்லை என்று தெரிவித்தனர்.

மேலும், எந்த விதமான திரவம் வீசப்பட்டது என்பது கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக சன்னிதானம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பத்தனமிட்டா எஸ்பி சதீஷ் பீனோ விசாரணை நடத்த டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சந்தேகப்படும் படி பம்பையில் நின்ற 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை விரைந்து பிடிக்க முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டுள்ளார்.