புதுவை முதலமைச்சர் நாராயணசாமிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், ஓரீரு தினங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு காலில் வலி ஏற்பட்டு, சில நாட்களாக அவ்வலியால் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு, இடது கால் மூட்டில் சதை வளர்ந்திருப்பது தெரியவந்தது. வலி அதிகமானதால் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள புதுவை முதல்வர் அலுவலகம், “முதலமைச்சர் நாராயணசாமிக்கு மருத்துவர்கள் குழுவினர், காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கின்றனர். சிகிச்சை நல்லபடியாக முடிவுற்ற நிலையில், முதல்வர் ஓய்வில் இருக்கிறார். ஓரீரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து நாராயணசாமி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அதன் பின்னர் மருத்துவர்களின் ஆலோசனை படி ஓய்வு எடுத்துக்கொண்டு, தனது பணிகளை வீட்டிலிருந்தபடியே தொடர்வார்” என்று தெரிவித்துள்ளது.