சென்னை: பள்ளி மாணவியை கோயம்பேடு பகுதியில் உள்ள லாட்ஜில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக திமுக பிரமுகர், துணை நடிகர் உள்பட 6 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கோயம்பேடு விடுதியில் பள்ளி மாணவியான சிறுமியை அடைத்து வைத்து , சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் , தலைமறைவாக இருந்த துணை நடிகர் மற்றும் தி.மு.க., நிர்வாகி கைது செய்யப்பட்டனர்.

சென்னை கோயம்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் 15 வயது பள்ளி மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக ஆந்திராவைச் சேர்ந்த சினிமா துணை நடிகை நாகம்மாள், கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த அஞ்சலி, பூங்கொடி, நாகராஜ், கார்த்திக் மற்றும் கார்த்திக்கின் மனைவி ஐஸ்வர்யா ஆகிய 6 பேரை கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என காவல்துறையின் விசாரணை நீண்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அந்த சிறுமியின் தந்தை இறந்து விட்டார். அவரது மனைவி வேறு ஒரு நபருடன் சென்று விட்டார். அனாதையாக இருந்த மாணவி உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி இருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பின்னர் அவரது மனைவி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து அந்த சிறுமையை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நெசப்பாக்கத்தைச் சேர்ந்த பாரதி கண்ணன் (வயது 60) என்பவர் கோயம்பேட்டில் உள்ள தனியார் விடுதியில் அடைத்து வைத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் பாரதி கண்ணன் சினிமா துறை நடிகர் ஆவார். இவர் தனது நண்பரான திருவள்ளூரை சேர்ந்த உளுந்தை ரமேஷ் ( திமுக நிர்வாகி / வயது 40)என்பவருக்கும் மாணவியை விருந்தாக்கியது தெரியவந்தது.
திமுக முன்னாள் நிர்வாகியான ரமேஷ், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே உள்ள உளுந்தை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராவார். மேலும் இவர் முதல்வர் ஸ்டாலினின் பண்ணை வீட்டையும் பராமரித்து வந்தார். ஆனால் அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதை அறிந்து பண்ணை வீட்டை பராமரிக்கும் பொறுப்புகளில் இருந்து ரமேஷ் அப்புறப்படுத்தப்பட்டார்.
இதனிடையே தலைமறைவாக இருந்த உளுந்தை ரமேஷ் மற்றும் பாரதி கண்ணண் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறினர்.
பள்ளி மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய விவகாரத்தில் விசாரணை நீண்டு கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Patrikai.com official YouTube Channel