கன்டெய்னர் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்திய ரயில்வே நிலத்தில் பிரத்யேக கன்டெய்னர் ரயில் முனையங்களை அமைக்க புதிய கொள்கை வழிகாட்டுதல்களை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த டெர்மினல்கள் கன்டெய்னர் கையாளுதலை நெறிப்படுத்தவும் நெட்வொர்க் முழுவதும் செயல்திறனை மேம்படுத்தவும் வடிவமைக்கப்படும்.

புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒரு ரயிலுக்கு ரூ. 80,000, அணுகல் கட்டணமாக விதிக்கப்படும். டெர்மினல்களில் கொள்கலன் சேமிப்புக் கட்டணம் ஒரு நாளைக்கு இருபது அடிக்கு சமமான யூனிட்டுக்கு (TEU) ரூ. 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, நாற்பது அடி சமமான யூனிட்டுகளுக்கு (FEU) கட்டணம் இருமடங்காக இருக்கும்.

ஒரு ரயிலில் கன்டெய்னர்களை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் அனுமதிக்கப்படும் இலவச நேரம் நிலையாக ஒன்பது மணிநேரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த டெர்மினல்களுக்கு கண்டெய்னர்கள் வந்தபின் ஏற்றி இறக்குவதற்கான இலவச நேரம் முடிந்ததும் டெர்மினல் வாடகை கட்டணம் தொடங்கும் என்றும் 12 நாட்களுக்கு மேல் கண்டெய்னர்கள் வைக்கப்படும் பட்சத்தில் அதன் கட்டணம் இருமடங்காக வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய டெர்மினல்கள் தவிர, தேசூர் (கர்நாடகா), விசாகப்பட்டினம், சிஞ்ச்வாட், மிராஜ் மற்றும் பல இடங்களில் உள்ள தளங்கள் உட்பட, பிரத்யேக கன்டெய்னர் ரயில் டெர்மினல்களுக்காக இந்தியா முழுவதும் 23 சாத்தியமான இடங்களை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

இந்த டெர்மினல்கள் உள்நாட்டு கொள்கலன் போக்குவரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, சரக்கு துறையை நவீனமயமாக்குவதற்கும், இந்தியாவின் தளவாட நெட்வொர்க்கின் செயல்திறனை அதிகரிப்பதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.