தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியின் அதிமுக வேட்பாளரான அமைச்சர் வைத்திலிங்கம், இரு நாட்களுக்கு முன் தென்னமநாடு கிராமத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அதே ஊரைச்சேர்ந்த போலீஸ்காரர் கோபி என்பவர், “ நீங்கள் ஐந்து வருடம் அமைச்சராக இருந்தீர்கள். பல முறை எம்.எல்.ஏவாகவும் இருந்தீர்கள். ஆனால் இந்த தொகுதிக்கு என்ன செய்தீர்கள்? சாலை வசதி கூட சரியாக இல்லை” என்று கேட்டார். இதனால் ஆத்திரமான அமைச்சரின் ஆதரவாளர்கள் கோபியை தாக்கினர். இதையடுத்து கோபி, தனது செருப்ப கழற்றி வைத்தியலிங்கம் மீது வீசினார்.
அதிமுகவினர் தன்னை தாக்கியது குறித்து ஒரத்தநாடு காவல்நிலையத்தில் கோபி புகார் அளித்தார். ஆனால் அவரது புகாரை வாங்க காவலர்கள் மறுத்துள்ளனர்.
ஆனால், திருவோணம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த கோபி, திடீரென ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதனால் மனமுடைந்த கோபி மண்ணெண்ணையை குடித்து, தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருக்கும் கோபிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.