சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதில் கூறினர்.

தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் கூட்டம்  இனறு காலை தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் சி.பி.எம். முன்னாள் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி, ரத்தன் டாடா, எஸ்ரா சற்குணம் உள்ளிட்டோரின் மறைவுக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துரை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

சோமரசம்பேட்டை அருகே உய்யகொண்டான் வாய்க்காலில் தடுப்பணை கட்ட வேண்டும் என அத்தொகுதி எம்எல்ஏ கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் கூறிய அமைச்சர் துரைமுருகன்,  உய்யகொண்டான் வாய்க்காலில் தடுப்பணை  கட்ட இயலாது, வேண்டுமென்றால் அந்த பகுதியில் உய்யகொண்டான் கால்வாய் சீரமைத்து தரப்படும். வேளாண் பாசனத்திற்கான உய்யகொண்டான் கால்வாய் 69 கி. மீ தூரம் சொல்கிறது. இதன் மூலம் தஞ்சை திருச்சியில் 40,000 ஏக்கர் நிலங்கள் 11 மாதங்கள் பாசன வசதி பெறுகிறது” என்றவர், இந்த காலத்துல பெய்யுற மழையெல்லாம் அணையில் இல்லை அணையே நிற்க மாட்டேங்குது..” என சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். மேலும் நிதியை பொறுத்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்.

மதுரையில் பாதாள சாக்கடை அமைப்பது குறித்து மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். அப்போது, மதுரை புறநகர் பகுதியில் ரூ.2,000 கோடியிலும், மதுரை மாநகர் பகுதியில் ரூ.1,500 கோடியிலும் பாதாள சாக்கடை மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு மழைநீர் வடிகால்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கி கழிவுநீர் கால்வாய்கள் அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

 ஊத்தங்கரையில் புதிய கிளைச்சிறைச்சாலை அமைக்கப்படுமா என அத்தொகுதி எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,  “ஊத்தங்கரையில் கிளைச் சிறை ஏற்கனவே இயங்கி வருகிறது, பராமரிப்பு பணிக்காக தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது, விரைவில் பராமரிப்புப் பணி முடிந்து கிளைச்சிறை மீண்டும் திறக்கப்படும். எனவே புதிய சிறை அமைக்க வேண்டிய தேவை கிடையாது” என பதில் அளித்தார்.
புதிய நியாய விலைக்கடைகள் அமைக்கப்படுமா என்ற உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய   கூட்டுறவுத் துறை அமைச்சர் அமைச்சர் பெரிய கருப்பன், தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 544 புதிய நியாய விலைக் கடைகளும், 1126 புதிய பகுதி நேர நியாய விலைக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மொத்தமாக 1,670 புதிய நியாய விலைக் கடைகள் துவக்கப்பட்டுள்ளன  என   பதில் அளித்துள்ளார்.