சென்னை: குளிர்காலம் வரவுள்ளதால் கொரோனா தடுப்பில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணம் பெற்றோர் விகிதம் என்பது 94 சதவிகிதமாக உள்ளது. தனியார் மருத்துவமனைகள் கைவிட்ட நோயாளிகளுக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இங்கு சர்வதேசத் தரத்திலான சிகிச்சையால் 26,762 பேர் இது வரை கொரோனாவில் இருந்து குணம் பெற்றுள்ளனர். இணைநோய்கள் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு 1,500 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
குளிர் காலத்தில், கொரோனா நோய் பரவல் தடுப்புப் பணி சவாலானதாக இருக்கும். ஆனாலும் சுகாதாரத்துறை தொடர்ந்து தடுப்புப் பணிகளில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது என்றார்.