சென்னை:  அமலபாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் ஒராண்டு காலம் சிறை வாழ்க்கையை அனுபவித்த அமைச்சர் செந்தில் உச்சநீதி மன்றத்தின்  தயவால் ஜாமினில் வெளியே இருக்கிறார். அவர்மீதான விசாரணை தொடர்ந்து நடத்தி, தீர்ப்பு வழங்க கீழமை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இதன் காரணமாக, அவர்மீதான விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விசாரணைக்கு தடை கோரி செந்தில் பாலாஜி தரப்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது மனுவில், தன்மீதான  பிரதான வழக்குகள் மீதான விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை வழக்கு விசாரணையை தள்ளிவைக்கக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி, கடிந்து கொண்டார். இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில்   மனு திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து, அவரது மனுவை  தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக  இருந்த செந்தில் பாலாஜி, தற்போது திமுக ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவர்மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளது. இதற்கிடையில், அதிமுக ஆட்சி காலத்தில்,   அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பலரிடமும் பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்குகள் சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த பிரதான வழக்குகளின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், தனக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரதான வழக்குகள் மீதான விசாரணை முடியும் வரை, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மறு ஆய்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.