சென்னை: சட்டப்பேரவை கேள்வி நேரத்த்தில் சட்டத்துறை தொடர்பான உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார். அப்போது சிவகங்கையில் சட்டக்கல்லூரி தொடங்க சாத்தியமில்லை என்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது சட்டத்துறை தொடர்பான உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார்.
சிவகங்கையில் அரசு சட்டக்கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என எம்.எல்.ஏ. செந்தில்நாதன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூறிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, காரைக்குடியில் புதிய சட்டக்கல்லூரி வழங்கப்பட்டு, கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. எனவே சிவகங்கையில் புதிதாக துவங்க வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து தவாக எம்எல்ஏ வேல்முருகன், பண்ருட்டியில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் அமைக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில்கூறிய அமைச்சர், கூடுதல் நீதிமன்றத்திற்கான பரிந்துரைகள் எதுவும் வரவில்லை. எதிர்காலத்தில் பரிந்துரைகள் பெறப்பட்டால், உயர் நீதிமன்றத்திடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
மேலும், அதிமுக எம்.எல்.ஏ. கே.பி. முனுசாமி கேள்விக்கு பதில்அளித்த அமைச்சர், தமிழ்நாட்டில் 15 அரசு சட்டக் கல்லூரிகள், 12 தனியார் சட்டக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 48,550 மாணவர்கள் சட்டம் படித்து வருகின்றனர். தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சிலில் 1.75 லட்சம் வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ள னர். வழக்கறிஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக தற்காலிகமாக சட்டக்கல்லூரி தொடங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.