சென்னை: வீட்டில் சமைத்து சாப்பிடுபவர்களுக்கு வரி ஏதும் அரசு விதிக்கவில்லையே என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமிர்த்தனமாக கருத்து தெரிவத்திருப்பதற்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது.
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்கு வழி வகை செய்யும் ஜிஎஸ்டி என்ற சட்டம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டதாக பொதுமக்களும், வியாபாரிகளும், எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
குறிப்பாக ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் காரணமாக உணவகங்களில் 5% முதல் 18% வரை விலை உயர்ந்துள்ளன. இதனால் வெளியூரில் பணி புரிபவர்கள், பணி நிமித்தம் வெளியூர் சென்று வருவபவர்கள், சுற்றுலா செல்பவர்கள், மருத்துவம் மற்றும் கல்வி காரணங்களுக்காக வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிறிய ரக உணவகங்களுக்கு 5 சதவீதமும் குளிர்சாதன வசதியில்லாத உணவகங்களில் 12 சதவீதமும், குளிர்சாதன வசதியுள்ள உணவகங்களில் 18 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் உணவகங்களில் கணிசமாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஓட்டல்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்தும், உணவு பொருள்களின் விலை அதிகரிப்பு குறித்தும் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த நிரமலா, ”வீட்டில் சமைத்து சாப்பிடுபவர்களுக்கு க்கு அரசு எந்த வரிவிதிப்பையும் விதிக்கவில்லையே” என்று திமிர்த்தனமாக பதில் அளித்தார்.
நிர்மலாவின் இந்த பொறுப்பற்ற பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
“வீட்டில் சமைத்தாலும் அதற்கான பொருட்கள் வாங்க வேண்டாமா.. அந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதே.. ஒரு அமைச்சராக இருப்பவருக்கு இதுகூட தெரியாதா..” என்று கடுமையாக விமர்சித்துவருகிறார்கள் நெட்டிசன்கள்.