சென்னை:
அதிமுக கட்சியில் நிர்வாகிகளை மாற்றி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது அதிமுக தலைமை. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் பதவி பறிக்கப்பட்ட நிலையில் மேலும் 3 மாவட்ட செயலாளர்கள் பதவியும் பிடுங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி.த.செல்லபாண்டியன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அ.தி.மு.க. நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்டம் என செயல்பட்டு வரும் மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு, இனி தூத்துக்குடி வடக்கு மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்படும்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளடங்கும். தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும்.
இதன் அடிப்படையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவில் திருத்தி அமைக்கப்பட்ட அ.தி.மு.க மற்றும் சார்பு அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாக பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
நீலகிரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.ஆர்.அர்ஜூனன் எம்.பி. அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். நீலகிரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் நியமிக்கப்படுகிறார்.
திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். திருப்பூர் புறநகர் மாவட்ட செய லாளர் பொறுப்பில் சட்டசபை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் நியமிக்கப்படுகிறார்.
அமைப்பு செயலாளர்கள் பொறுப்பில் இருக்கும் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., புத்திசந்திரன் ஆகியோர் அவரவர் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்களாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கே.ஆர்.அர்ஜூனன் எம்.பி., முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்ட உள்ளது.