மதுரை: முல்லை பெரியாறு விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் காமெடி செய்கிறார் என முன்னாள் அதிமுக அமைச்சர்  செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள அரசு தண்ணீர் திறந்த விவகாரம் தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்,  142 அடி வரை தேக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 136.50 அடியை கடந்த நிலையில் கேரளாவிற்கு நீர் திறந்து விட்டதற்கு அதிமுக,. பாஜக கட்சிகள் கண்டனம் தெரிவித்து, போராட்டங்கள் அறிவித்து உள்ளன.

இந்த நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் குழு அணையை ஆய்வு செய்ததுடன், முந்தைய அதிமுக அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அள்ளி விசினர். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ததில்லை.எனவே,முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை பற்றி பேச இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோருக்கு தகுதி இல்லை  என அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் துரைமுருகன் காமெடி செய்திருக்கிறார். அவரால் கேரள அரசைக் கண்டிக்க முடியவில்லை. அவர்களைக் கேள்வி கேட்கத் துணிவில்லை. இவர்களால் முல்லைப்‌ பெரியாறு அணையின் மொத்த நீராதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் துரைமுருகன் தன்னிலை மறந்து காழ்ப்புணர்ச்சியுடன்  வசை பாடி இருக்கிறார். முல்லைப் பெரியாறு அணை குறித்துப் பேச திமுகவிற்கு உரிமை கிடையாது. திமுக அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு மட்டும் ஆபத்தை உருவாக்கவில்லை. இதேபோன்ற ஒரு சூழ்நிலை காவிரி ஆற்றுப் பிரச்சினைக்கும் வரும். அதேபோலக் கபினி அணையில் இதே போன்ற பிரச்சினை எழும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்’

இவ்வாறு அவர் கூறினார்.