சென்னை
தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் குடிநீரில் கழிவு நீர் கலப்பால் சிறுவன் மரணம் என்பதை மறுத்துள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு பீகாரைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் பணி நிமித்தமாக குடும்பத்துடன் சென்னைக்கு புலம்பெயர்ந்தார். அவர் கிண்டியில் பணியாற்றி சைதாப்பேட்டையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
கடந்த புதன்கிழமை ராஜேஷ் குமாரின் 3-ஆவது மகனான யுவராஜூக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டு 2 நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், வியாழக்கிழமை இரவு உடல்நிலை மோசமானதால், கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவனை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில், செல்லும் வழியிலேயே யுவராஜ் உயிரிழந்தார். மேலும் ராஜேஷ்குமாரின் 4-ஆவது குழந்தையான மீராவுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவன் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குடிநீர் மாதிரியை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பினர். இது குறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சம்பவம் இடத்தில் ஆய்வு செய்தனர்.
பிறக் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம்,
“சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அபி காலனி பகுதியில் 182 வீடுகள் உள்ளன. பத்து நாட்களுக்கு முன் பீகாரில் இருந்து வாடகைக்கு தாங்கிய குடும்பத்தினரின் குழந்தை வயிற்றுப்போக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளார். சிறுவனின் குடும்பத்தினரிடம் கேட்டறிந்த போது வேலை செய்கிற இடங்களில் வெளியில் சாப்பிட்டதாக கூறுகிறார்கள்.
சைதாப்பேட்டை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதற்கான அறிக்கை இரண்டு நாட்களில் வந்துவிடும். 200க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து தண்ணீர் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பள்ளம் தோண்டி குளோரின் கூடுதலாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளையும் மருத்துவ முகாம் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.
சென்னையில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பிறகு குழந்தைக்கு எதனால் பாதிப்பு ஏற்பட்டது என்பது வெளியே வரும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தை நலமாக உள்ளார். அவர் இன்றோ, நாளையோ வீடு திரும்பி விடுவார். குடிநீர் வாரியத்தின் அலுவலர்களும், உணவு கட்டுப்பாட்டுத்துறை அலுவலர்களும் வருகை தந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
பரிசோதனைக்காக எடுத்துச் சென்ற குடிநீரில் எந்த கலப்பும் இல்லை. குடிநீரில் எந்தவித கழிவுநீரும் கலக்கப்படவில்லை. சிறுவனின் இறப்பிற்கு காரணம் என்னவென்று துறையை சார்ந்த அலுவலர்கள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பார்கள். மழை காலங்களில் பைப்புகளில் சின்னதாக ஓட்டை விழுந்தாலும் தண்ணீரின் நிறம் மாற வாய்ப்புள்ளது. மாநகராட்சி அலுவலர்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கக்கூடிய வீடுகளில் சென்று ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறதா என்பதை கேட்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது”
என்று தெரிவித்துள்ளார்.