குணா
நேற்று நடந்த சாலை விபத்தில் மத்தியப் பிரதேச பாஜக செயலாளர் உள்ளிட்ட இருவர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இரவு மத்தியப் பிரதேசத்தில் குணா மாவட்டத்தில் கொத்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நியூ சிட்டி காலனி பகுதியருகே பா.ஜ.க. மாவட்டச் செயலாளர் ஆனந்த் ரகுவன்ஷி மற்றும் கமலேஷ் யாதவ் இருவரும் ஸ்கூட்டர் ஒன்றில் சென்றனர்.
இவர்களில் கமலேஷ், மோகன்பூர் கிராம பஞ்சாயத்துத் தலைவரின் கணவர் ஆவார். அவர்கள் இருவரும் மனோஜ் தகத் என்பவரின் வருகைக்காகச் சாலையோரம் ஸ்கூட்டரில் இருந்தபடி காத்திருந்தபோது, எதிரே வந்த கார் ஒன்று இவர்களுடைய வாகனம் மீது மோதி விபத்திற்குள்ளானது.
கமலேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட ரகுவன்ஷி சிகிச்சைக்குக் கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்துள்ளார். இந்த விபத்தில், தகத் படுகாயமடைந்து உள்ளதால் அவர் இந்தூர் நகருக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.
விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த சவுரப் யாதவ் என்பவர் விமானப் பயிற்சி பெற்று வந்துள்ளார். மற்றொரு பயிற்சி விமானியான ஐதராபாத் நகரைச் சேர்ந்த ஆபாஷ் என்பவர் அவருடன் சென்றுள்ளார்.
விபத்தில், ஸ்கூட்டர் நொறுங்கிப் போனது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, இருவரையும் கைது செய்து விபத்தில் தொடர்புடைய காரை பறிமுதல் செய்தனர்.
பாஜக பிரமுகர் மறைவையடுத்து, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, அஞ்சலி செலுத்தும் வகையில், அவருடைய இன்றைய தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் ரத்து செய்துள்ளார்.
[youtube-feed feed=1]