நடிகர் கமல்ஹாசன் குறித்து, “அவன் ஒரு ஆளே அல்ல” என்று ஏக வசனத்தில் தமிழக அமைச்சர் அன்பழகன் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த நிகழ்ச்சியை தடை செய்து கமல் உள்ளிட்ட நிகழ்ச்சியில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என சில அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றந.
இதையடுத்து குறிப்பிட்ட நிகழ்ச்சி குறித்து விளக்கம் அளிக்க நடிகர் கமல், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருக்கிறது” என்று அதரடியாக கருத்து தெரிவித்தார். மேலும், “சிஸ்டம் சரியில்லை என ரஜினி இப்பொழுது தான் சொல்கிறார். நான் ஒரு வருடத்திற்கு முன்பே கூறிவிட்டேன்” என்றார்.
கமலின் இந்த கருத்துக்கள் குறித்து பலரும் பேச ஆரம்பித்தார்கள். சமூகவலைதளங்களிலும் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து தமிழக அமைச்சர் ஜெயக்குமார், சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கமலை விமர்சித்து பேட்டியளித்தனர்.
இந்த நிலையில் பொறியியல் கலந்தாய்வு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன். அவரிடம் கமலின் கருத்து குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “கமல் ஒரு ஆளே கிடையாது. அவன் சொல்றதுக்கெல்லாம் நான் பதில் சொல்லணும்னு அவசியமே இல்லை” என்று கமலை ஒருமையில் விளித்து ஆத்திரத்துடன் பதில் அளித்தார்.
அமைச்சராக இருப்பவர், நாகரீகமின்றி பதில் அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
(வீடியோ நன்றி: நியூஸ் 7 தொலைக்காட்சி)