“எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும்” என்று அதி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள் அதிலும் சில மாண்புமிகுக்களின் நடவடிக்கை ரொம்பவே த்ரில்லிங்காக (!) இருக்கிறது.
அந்த மாண்புமிகுவுக்கு எதிராக முக்கிய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு போன் செய்து, பேட்டி கேட்டிருக்கிறார் பிரபல தினசரியின் நிருபர். அவரும் “நாளை காலை வாருங்கள்” என்று சொல்லியிருக்கிறார்.
அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் மாண்புமிகுவிடமிருந்து அந்த நிருபருக்கு போன்.
“என் எதிர் கேண்டிட்கிட்ட பேட்டி கேட்டீங்களாம் … நாளை காலையில சந்திக்கப்போறீங்களாம். அவரை ஏன் பேட்டி எடுக்க நினைக்கிறீங்க. என்னைப்பத்தி போடுங்க பிரதர்” என்று சொல்லியிருக்கிறார் மாண்புமிகு.
“இப்பத்தான் அவருக்கு போன் செய்தோம். அது எப்படி இவருக்குத் தெரிந்தது..” என்று நிருபர் குழம்பியிருக்கிறார்.
பிறகு விசாரித்தபோதுதான் தெரிந்திருக்கிறது, மாண்புமிகுவின் அபார திறமை.
அதாவது, எதிர் முகாமில் இருக்கும் சபலக்காரர்கள் சிலரை வலைவீச பிடித்த மாண்புமிகு, “நீங்க இங்கே வரவேணாம். ஒதுங்கியிருக்கவும் வேணாம். அவர் கூடவே இருங்க.. என்ன நடக்குதுன்னு அப்பப்ப சொல்லுங்க போதும்..” என்று சொல்லியிருக்கிறாராம்.
அவர்களுக்கு, தனது தொகுதியின் பெயருக்கு ஏற்ப “பெருந்”தொகை கொடுத்திருக்கிறாராம்.
“ஏற்கெனே பல “தோப்புகளை” வாங்கிக் குவிச்சுட்டார் அந்த மாண்புமிகு. இப்படியே போனா இன்னும் எத்தனை “தோப்புகளை” வாங்கிக்குவிப்பாரோ” என்று வியக்கிறார்கள் லோக்கல் பத்திரிகையாளர்கள்.
ஆனால் இந்த விவரம் தெரியாத எதிர்க் கட்சி வேட்பாளர், “சாமி” மேல பாரத்தைபோட்டுவிட்டு தன் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார்.