டில்லி
மாநிலங்களவைக்கு வராத மத்திய இணை அமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யானுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒரு சில அமைச்சர்கள் கலந்துக் கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இது குறித்து பிரதமர் மோடி ஏற்கனவே தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இந்த தொடரில் மாநிலங்களவை கூட்டம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத் தொடரில் நேற்று மத்திய விலங்குகள் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யான் கலந்துக் கொள்வார் என வியாழக்கிழமை அன்று அறிவிக்கப்ப்ட்டிருந்தது. இதையொட்டி உறுப்பினர்கள் பலர் கேள்விகளுடன் காத்திருந்தனர். ஆனால் அமைச்சர் கூட்டத்துக்கு வரவில்லை.
அதனால் அதிருப்தி அடைந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, “மந்திரி அவர்களே, நேற்று முன் தினம் அவைக்கு வரவேண்டிய அமைச்சர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தது. ஆனால் நீக்கள் வரவில்லை. இன்றும் வரவில்லை. இது போல் இன்னொரு முறை நடக்கக் கூடாது” என எச்சரிக்கை விடுத்தார்.
இதை அறிந்த அமைச்சர் தாம் மாநிலங்களவைக்கு வராததற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் இனி இவ்வாறு நடக்காது என உறுதி அளிப்பதாகவும் அறிவித்துள்ளார்.