மும்பை:
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை உருவாக்க சிவசேனை, என்சிபி, காங்கிரஸ் இடையே தொடா்ந்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிருத்விராஜ் சவான், ‘மகாராஷ்டிரத்தில் சிவசேனை, என்சிபி, காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைப்பது தொடா்பான பேச்சுவாா்த்தை இப்போது தொடக்க நிலையிலேயே இருந்து வருகிறது என்றும், குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை வகுப்பது குறித்து பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும், தொடா்ந்து ஆலோசனை நடைபெறும்’ என்றாா்.
இதற்கிடையில் வரும் 17ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியுடன், என்சிபி தலைவர் சரத்பவார் சந்தித்து பேச உள்ளார். அப்போது சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்கப்படும் என்றும், அதைத்தொடர்ந்தே, மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்பது குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
மாநிலத்தில், பாஜக, சிவசேனா போன்ற கட்சிகள் இந்துத்துவாவை முன்னிலைப்படுத்தி வரும் நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மதசார்பின்மையை முன்னிலைப்படுத்தி வரும் நிலையில், இந்த கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை செயல்படுத்த முடியுமா என்றும் கேள்வி எழுந்து உள்ளது.