சென்னை
சென்னை முகப்பேரில் மினி பேருந்து ஓட்டுனரை குடிபோதையில் 3 இளைஞர்கள் தாக்கியதால் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு பின்பு அதை விலக்கிக் கொண்டனர்.
நேற்று இரவு எஸ் 42 என்னும் தட எண் கொண்ட மினி பேருந்து சென்னை மதுரவாயலில் இருந்து கொரட்டூருக்கு சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்தை அன்பு என்னும் ஓட்டுனர் செலுத்திக் கொண்டிருந்தார். இந்த பேருந்து சுமார் 10.15 மணிக்கு சென்னை முகப்பேர் கோல்டன் குடியிருப்பு அருகே வரும் போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் பேருந்தை மடக்கி நிறுத்தி உள்ளனர். ஓட்டுனரிடம் தகராறு செய்த மூவரும் குடிபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
திடீரென மூவரும் ஓட்டுனர் அன்புவை உருட்டுக் கட்டையால் தாக்கி உள்ளனர். இதனால் அன்பு பலத்த காயம் அடைந்துள்ளார். பேருந்துப் பயணிகளும் அந்த வழியாக சென்றவர்களும் தப்பி ஓட முயன்ற இளைஞர்களை துரத்தி உள்ளனர். ஒரு இளைஞர் மட்டும் வாகனத்துடன் பிடிபட்டுள்ளார். மற்ற இருவரும் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்த தகவல் பரவவே அந்தப் பகுதி போக்குவரத்து ஊழியர்கள் ஆங்கான்க்கே பேருந்துகள சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
அதையொட்டி கொரட்டூரை சேர்ந்த காவல்துறையினர் போராட்ட ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால் தப்பி ஓடிய இருவரை பிடிக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்தனர். அந்த இரவு நேரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். அதனால் பொதுமக்கள் வேலை நிறுத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் இட்டனர். அதை ஒட்டி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்டனர்.
பிடிபட்ட இளைஞரை கொரட்டூர் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தப்பிய இருவரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.