மிமிக்ரி

சிறுகதை

பா.தேவிமயில் குமார்

 

குழந்தை பர்வதாவை முதுகில் நாலு அடி கொடுத்து, திட்டி விட்டு தன் வேலையைப் பார்த்தாள் ராஜம்.

என்ன தான், பள்ளி, கல்லூரி நாட்களில் மேடைப் பேச்சாளராக வலம் வந்தாலும், இப்போது என் வாழ்க்கையில் முன்பு போல உரிமை, உரிமை என கத்த முடியவில்லை, அதெல்லாம் வெறும் பரிசுக்காக மட்டும்தான் என நினைத்து குழந்தையின் பக்கத்தில் படுத்தாள்.

படிப்பை மட்டும் பார்த்தால் போதும் என்ற நிலைக்கு பர்வதா வர வேண்டும், வேறு எந்த மேடைப் போட்டியிலும் கலந்து கொள்ள வேண்டாம் அவள், அதெல்லாம் கறிக்கு உதவாத ஏட்டுச் சுரைக்காய் என நினைத்தாள்.

ராஜத்தின் கணவன் இறந்ததால் கருணை அடிப்படையில் அந்த வேலையை இவள் பெற்றாள்.

அப்பப்பா, அதில் எத்தனை ஓநாய்கள், சிங்கங்கள், புலிகள், எவ்வளவுதான் தாண்டியும், ஓடியும் வருவது ? முடியவில்லை, வேலை வேண்டாம் என நினைத்தாலும் பர்வதாவின் எதிர்காலத்திற்காக இந்த போர்க்கள அனுபவங்களை தினமும் எதிர் கொள்ளதான் வேண்டும் என நினைத்தபடியே கண்ணயர்ந்தாள்.

சரியாக மணி இரவு 12:30, செல் போன் அடித்தது,

அய்யய்யோ, அந்தப் படுபாவி மேலாளர் இன்னைக்கும் போன் பன்றானே, என்ன செய்வது ?

எடுத்தாலும் கேவலமாகப் பேசுவான், எடுக்கவில்லையென்றாலும், நாளை அலுவலகத்தில் ஏதோ ஒரு விதத்தில் அவமானப்படுத்துவான், கடந்த 2 மாதமாக இவன் தொல்லை தாங்கவில்லை என நினைத்தபடியே போனை கையில் வைத்திருந்தாள்.

அப்போது சிறுமி பர்வதா அம்மாவிடம் சைகையில் கண்ஜாடை காண்பித்தாள்,

உடன் போனை வாங்கி

என்னப்பா, மேனஜர், உன் வேலையை மட்டும் பார், நான் சென்னையிலிருந்து ராஜத்தின் தம்பி வந்திருக்கேன், நான் காவல்துறையில் வேலை செய்யறேன், இனி போன் வந்தால் என் துறை உயர் அதிகாரிகளுக்கு சொல்லி உன் வேலையை காலி பண்ணிடுவேன், ஜாக்கிரதை என கரகரத்த குரலில் பேசி விட்டு போனை வைத்தாள்.

ராஜம் பர்வதாவை அப்படியே ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“என்ன பர்வதா இது ?” என்றாள்

“அம்மா நீ தினம் ராத்திரி இந்த போன் வந்தா அழும்போது எனக்கு கஷ்டமா இருக்கும், எனக்கு தான் மிமிக்ரி நல்லா வரும் இல்லையா அதனால நான் ஒரு வாரமா இப்படி பேச முயற்சி செஞ்சேன்மா, எப்படி இருந்துச்சு ?” என்றாள்.

“அவன், பயந்துருப்பான் பர்வதா, நானே குரலை பார்த்து அசந்துட்டேன்,” என்று கட்டிக் கொண்டாள்.

“சரி, நீ என்ன போட்டியில கலந்துக்கணும்னு சொன்ன ?”

“மிமிக்ரிமா,” என்றாள் அந்த 12 வயது குழந்தை

“சாரி, பர்வதா, நீ கலந்துக்க, நல்லா பண்ணுடா” என்றாள்.

அடுத்த நாள் காலை ராஜம் அலுவலகம் செல்லும் போது அந்த அதிகாரி குனிந்தபடி ஏதோ வேலை செய்வது போல நடித்துக் கொண்டிருந்தான்.

இவள் தலை நிமிர்ந்து நடந்து சென்றாள்.