புதுடெல்லி:
கொரோனா பாதிப்பால் எளிய மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை கேள்விக்குள்ளாகியுள்ளது. இதனால், அரசுத் தரப்பிலிருந்து இலவச தானியங்கள் வழங்கப்படுகின்றன. இதனை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்குமாறு இந்திய பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், “கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், இந்தியாவின் ஏழை எளிய மக்கள் பலரும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இவர்களில் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டன.
மேலும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வராத பிறமாநிலத் தொழிலாளர்களுக்கும் அதே போல நபர் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டன. ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரை வழங்கப்பட்ட இந்த உணவு தானியங்கள், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் வரை வழங்கப்பட வேண்டும்”என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் பல மாநிலங்கள் இந்த கோரிக்கையை வைத்துள்ளன. எனவே மத்திய அரசு இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், கணக்கில் வராத சில குடும்பங்களுக்காக தற்காலிக ரேஷன் அட்டைகள் வழங்குவது குறித்தும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.