அமெரிக்காவின் நியூ ஜெர்சி பெட்மின்ஸ்டரில் உள்ள டிரம்ப் தேசிய கோல்ஃப் கிளப் மீது பறக்க இருந்த பயணிகள் விமானத்தை ராணுவ விமானங்கள் இடைமறித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பகுதியில் விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தற்காலிக விமானக் கட்டுப்பாட்டை (TFR) மீறி பயணிகள் விமானம் ஒன்று அந்தப் பகுதிக்குள் நுழைய முயன்றதை அடுத்து NORAD எனப்படும் வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளை அமெரிக்க போர் விமானங்களை உடனடியாக அங்கு அனுப்பியது.

இதையடுத்து அந்த விமானத்தின் பைலட்டுக்கு சமிக்ஞை செய்த ராணுவ விமானங்கள் அதனை இடைமறித்து பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுத்தியது.
அமெரிக்க முன்னாள் இந்நாள் அதிபர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் மற்றும் முக்கிய இடங்கள் மீது விமானங்கள் பறக்க அவ்வப்போது தடைகள் விதிக்கப்படுவதுண்டு.
அந்த வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செல்லும் இடங்களிலும் இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற இந்த அத்துமீறல் ஒரேநாளில் நடைபெற்ற இரண்டாவது சம்பவம் என்றும் இந்த வார இறுதியில் மட்டுமே இது ஏழாவது அத்துமீறல் என்றும் கூறப்படுகிறது.
மேலும், நேற்று இந்த சம்பவத்தின் போது அதிபர் டிரம்ப் அந்த கோல்ப் மைதானத்தில் இருந்ததை அடுத்து அமெரிக்காவில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.