ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில், பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் குல் முகமது மீர், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள நவ்காம் வெரினாக் பகுதியில் உள்ள குல் முகமதுவின் வீட்டிற்கு வந்த 3 தீவிரவாதிகள், அவரிடம் கார் சாவியைத் தருமாறு கேட்டனர்.
காரை வெளியே ஓட்டிச்சென்ற பின்னர், குல் முகமதுவை நோக்கி தோட்டாக்களைப் பாய்ச்சிவிட்டு சென்றுவிட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் மரணமடைந்தார்.
இத்தாக்குதலுக்கு அனுதாபத்தையும், கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ள பாரதீய ஜனதா, தீவிரவாதிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது.
காஷ்மீரின் இதர முக்கிய அரசியல் தலைவர்களான ஒமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.