டெல்லி: கொரோனா வைரஸ் தாக்கம், அரசின் நடவடிக்கை தொடர்பாக பரப்பப்படும் போலி செய்திகளை கட்டுப்படுத்துமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்பாக அரசு தகவல் தெரிவித்து, விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறது.
அதேசமயத்தில், பீதியை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் போலியான தகவல்களும் பதிவிடப்பட்டு வருகிறது. இந் நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக, புலம்பெயரும் தொழிலாளர்களின் நலன் குறித்து உச்ச நீதிமன்றத்தில் கேரளா மற்றும் மேற்கு வங்க எம்பி.க்கள் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி நாகேஸ்வர ராவ் ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த வழக்குகளை விசாரித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
நாடு முழுவதும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த முகாம்களை நிர்வகிக்கும் கடமையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா பற்றி போலி செய்திகள் மூலம் பரவி வரும் பீதியை எதிர்கொள்ளவும், வைரஸ் தொற்றுநோய் குறித்த உடனடி தகவல்களை வெளியிடுவதற்காகவும், 24 மணி நேரத்திற்குள் மத்திய அரசு ஒரு இணையதளத்தை உருவாக்க வேண்டும்.
புலம்பெயர்ந்தோர் தொடர்பான பிரச்னையை அந்தந்த மாநில உயர்நீதி மன்றங்கள் மேலும் உன்னிப்புடன் கண்காணிக்க வேண்டும். இதுதொடர்பாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை அரசு வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றங்களில் தெரியப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.