சென்னை: சென்னையின் கடற்கரை சாலை, அண்ணாசாலை உள்பட சில இடங்களில் நள்ளிரவு நடைபெற்ற பைக் ரேஸை தடுத்த காவல்துறையினர், அது தொடர்பாக 35 இரு சக்கர வாகனங்களை கைது செய்துள்ளனர்.
சென்னையில் அவ்வப்போது பைக் ரேஸ்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையின் புறநகர் சாலைகள், அண்ணா சாலை மற்றும் அண்ணாநகர் போன்ற முக்கிய பகுதிகளில், நள்ளிரவு முதல் அதிகாலை வரை இளைஞர்கள் அதிக ஒலி எழுப்பியபடி, பைக் ரேசில் ஈடுபட்டு வருகின்றனர். இது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, அடையாறு போன்ற சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் வீலிங் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். அதீத வேகத்தில் பைக்கில் செல்லும் போது நிகழும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர் மட்டுமின்றி எதிரில் வரும் வாகன ஓட்டிகளும் இந்த விபத்தில் சிக்கி மரணமடையும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் காவல்துறையினருக்கு சென்றுள்ளது. இதைத்தொடர்ந்து இரவு பைக் ரேசில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் கைது செய்து நடிவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று சென்னையில் சில பகுதிகளில் பைக் ரேஸில் நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை அண்ணா சாலையில் விடிய விடிய இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல், ஜிபி ரோடு, மெரினா காமராஜர் சாலை போன்ற பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை அண்ணா சாலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் காவல் துறையின் வாகன தணிக்கையின்போது பைக் ரேசில் ஈடுபட்டவர்களை அதிரடியாக மடக்கினார். இதனையடுத்து கட்டுப்பாடுகளை மீறி அதிவேகமாக வாகனங்களை ஓட்டிய இளைஞர்களிடமிருந்து 35 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.