நேற்று (மார்ச் 19ந்தேதி) நள்ளிரவு 11 மணியளவில் திடீரென  சமூக வலைதளங்கள் திடீரென முடங்கின. வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக்,  மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டா கிராம்  இணையதளங்கள் முடங்கின. இதனால் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களை நம்பியுள்ள கோடிக்கண்ககான இணையதளவாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.  இந்த திடீர் முடக்கத்துக்கு காரணம் என்ன என்பது குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படாத நிலையில், அது தொடர்பான ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது.

உலக அளவில் வெள்ளிக்கிழமை இந்திய நேரம் இரவு 11 மணிக்குப் பிறகு வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களின் வேகம் படிப்படியாக குறைந்து பின்னர் முழுமையாக முடங்கின.  குறிப்பாக, ஆண்ட்ராய்ட், ஆப்பிள் செல்பேசி செயலிகள் மூலம் பதிவிறக்கப்பட்ட ஃபேஸ்புக், வாட்ஸ்அப் சேவைகள் மூலம் பயனர்களால் தகவல்கள் பரிமாற்றத்தை மேற்கொள்ளவோ தகவல்களை பெறவோ இயலவில்லை.

இந்த  முடக்கம் இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தாக கூறப்படுகிறது. சர்வரில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய நிபுணர்குழுவினர் தீவிர முயற்சி எடுத்ததன் பலனாக 40 நிமிடங்களுக்குப் பிறகு பேஸ்புக் நிறுவனத்தின் சேவைகள் இயல்பு நிலை திரும்பின. இரவு 11.38 மணிக்கு பிறகு வாட்ஸ் சேவை இயங்கத் தொடங்கின.

வாட்ஸ்அப் நிறுவனமோ, பிற சமூக ஊடக நிறுவனமோ இந்த செய்தி பதிவேற்றப்படும் இந்திய நேரப்படி இரவு 11.30 மணிவரை எந்த விளக்கத்தையும் தரவில்லை.                 இதுதொடர்பாக, சமூக ஊடக சேவைகளின் செயல்பாடு மற்றும் வேகத்தை கண்காணிக்கும் தனியார் இணையதளமான டவுன்டிடெக்டர், சேவை முடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாக சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் சேவையை பெற முடியவில்லை என்று முறையிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் இது 30 ஆயிரத்தைக் கடந்தும், ஃபேஸ்புக்கில் இது 50 ஆயிரத்தை கடந்தும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது  இந்த மூன்று முக்கிய செயலிகளும் ஏன், எதற்காக திடீரென என்பதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில்,  ஏராளமானோர்,  வாட்ஸ்அப் செயலி, இன்ஸ்டாகிராம் செயலி, ஃபேஸ்புக் சேவை முடங்கியதை பரவலாக விமர்சித்தும் அந்த தகவலை பகிர்ந்தும் கருத்துகளை பதிவிட்டு #whatsappdown என்ற பெயரில் ஹேஷ்டேக்கை டிரெண்டிங்காக்கி  வருகின்றனர்.