பெங்களூரு

ர்நாடகா சட்டசபைக்கு உறுப்பினர்கள் குறைவாக வருவதால் மதிய உணவு வழங்க அரசு உத்தேசித்துள்ளது.

கர்நாடக சட்டசபைக்கு உறுப்பினர்கள் வருகை மிகவும் குறைவாக உள்ளது.  பெரும்பாலானோர் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டுவிட்டு சென்று விடுகிறார்கள்.  சபைக்கு வரும் சிலரும் முக்கிய விவாதங்களில் கலந்துக் கொள்ளாமல் வந்து சிறிது நேரத்துக்குள் கிளம்பி விடுகின்றனர்.  இதனால் சட்டசபை உறுப்பினர்களுக்கு மதிய உணவு வழங்க அரசு உத்தேசித்துள்ளது.

இது குறித்து கர்நாடகா மாநில சபாநாயகர் கே பி கோலிவாட் கருத்து தெரிவிக்கையில், “மதிய உணவு அளித்தாலாவது சட்டசபை உறுப்பினர் முழுவதும் கலந்துக் கொள்வார்களா என்பது சந்தேகமாக உள்ளது.  நாட்டு மக்களின் பிரதிநிதிகள் இது போல நடந்துக் கொள்வது வருத்தத்துக்கு உறியது.  இதற்காக காலை, மாலை இரு வேளையும் தனித்தனியாக வருகை பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட உள்ளது.” என தெரிவித்தார்.

பெயர் தெரிவிக்க விரும்பாத உறுப்பினர் ஒருவர், “சட்டசபை கூட்டத்துக்கு வராத உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  அவர்களுக்கு சட்டசபை கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக சபை கூடும் நாட்களில் ஒரு நாளைக்கு ரூ.1000 அலவன்ஸ் வழங்கப்படுகிறது.  இது தவிர மாதம் ரூ.65000 சம்பளமும், ரூ.25000 மாதாந்திர பயணப் படியும் வழங்கப்படுகிறது.  அப்படி இருந்தும் அவர்கள் வராமல் அவர்கள் வருகையை அதிகப்படுத்த மதிய உணவு அளிக்கும் திட்டம் என்பது மிகவும் கண்டிக்கத் தக்கது” என தெரிவித்துள்ளார்.