டெல்லி: இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள் வருத்தமளிக்கக் கூடியது, குடியுரிமை சட்டம் மோசமானது என்று மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நாதெள்ளா கூறியிருப்பது வைரலாகி இருக்கிறது.
உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோ சாப்ட் ஆகும். அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக, ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட சத்யா நாதெள்ளா பிப்ரவரி 2014 முதல் இருந்து வருகிறார்.
குடியுரிமை சட்டம் குறித்து அவர் கூறிய கருத்து ட்விட்டரில் டிரண்டாகி வருகிறது. அவர் கூறியதாவது: இந்தியாவில் நடப்பது வருத்தமளிக்கக் கூடியது. குடியுரிமைத் திருத்தச்சட்டம் மோசமானது என்றார்.
நாதெள்ளா கூறியதை Bussfeed news என்ற நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் பென் ஸ்மத் ஒரு பதிவில் வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: என்ன நடக்கிறது என்பதை நினைத்தால் வருத்தமளிக்கிறது. இது மோசமானது.
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து பெரிய சாதனையாளராகவோ, இன்போசிஸ் நிறுவன அடுத்த தலைமை செயல் அதிகாரியாகவோ வர வேண்டிய ஒருவரை நான் காண விரும்புகிறேன் என்று கூறி இருக்கிறார்.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் இந்தியா சார்பாக நாதெள்ளா அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் தெரிவித்துள்ளதாவது: ஒவ்வொரு நாடும் அதன் எல்லைகளை வரையறை செய்யும். மேலும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும்.
அதற்கேற்ப குடியுரிமை கொள்கையை வகுக்கும். ஜனநாயக நாடுகளில், இது மக்களும், அரசாங்கங்களும் சேர்ந்து எல்லைகளை விவாதித்து வரையறுக்க வேண்டிய ஒன்று. பல கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவில் வளர்ந்தவன் நான்.
அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த அனுபவமும் இருக்கிறது. இந்திய சமுதாயத்திற்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை வழிநடத்த விரும்பும் இந்தியனாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.