திருவனந்தபுரம்

கேரளாவில் பீர் தயாரித்து விற்கும் நிலயங்கள் விரைவில் துவங்க இருப்பதாக அம்மாநில கலால் துறை அறிவித்துள்ளது.

ஆங்கிலத்தில் MICRO BREWERIES என அழைக்கப்படும் இந்த விற்பனை நிலையங்கள் ஏற்கனவே கர்னாடகாவிலும், அரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சில ஓட்டல்களில் இயங்கி வருகின்றன.  மற்ற பீர் விற்பனையகங்களுக்கும் இவற்றுக்கும் வித்தியாசம் உள்ளது.  அவைகளில் பல பிராண்டுகள் பீர் கிடைக்கும்.  தவிர அவை எல்லாம் ப்ரிசர்வேடிவ் எனப்படும் கெட்டுப்போகாமல் இருக்க உதவும் பொருட்கள் கலந்து பாட்டில் அல்லது கேன்களில் அடைக்கப்பட்டவைகள் ஆகும்

இந்த மைக்ரோ ப்ரேவரீஸ் விற்பனை நிலையங்களில், புதிதாக தயாரிக்கப்பட்ட பீர் எந்த ஒரு ப்ரிசர்வேட்டிவ்களும் இன்றி நேரடியாக கோப்பைகளில் பிடிக்கப்பட்டு விற்கப்படும்.  இந்த விற்பனை நிலையங்களை துவங்க அனுமதி அளிக்க 2005ல் இருந்து கலால் துறை திட்டமிட்டுள்ளது.  தற்போது அரசு இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிலையங்கள் துவங்க கொச்சியில் உள்ள ஏழு நட்சத்திர ஓட்டல் ஒன்றும் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றும் அனுமதி கேட்டுள்ளன.  அது மட்டுமின்றி கேரளாவின் பல ஓட்டல்கள் 24 மணி நேர பப் நடத்தவும் அனுமதி கோரி உள்ளன.  முந்தைய அரசின் மதுக் கொள்கையில் இருந்து தற்போதைய கேரள அரசு மிகவும் மாறுபட்டுள்ளது.  பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் மது தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுமதி அளிக்கும் போது இது போன்ற விற்பனை நிலையங்களை அனுமதிப்பதில் தவறில்லை எனவும், மது எல்லா இடங்களில் விற்கும் போது 24 மணி நேர பப் நடத்தவும் அனுமதி வழங்குவதிலும் குற்றமில்லை என கூறி உள்ளார்.