மெக்சிகோ: இறப்புச் சான்றிதழ் பற்றாக்குறை ஏற்பட்டதால், மெக்சிகோ நாட்டு அரசு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இறப்புச் சான்றுகளை புதிதாக அச்சடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது மெக்சிகோ. அங்கு இதுவரை 637509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 67781 என்பதாக உள்ளது. அதேசமயம், பலியானோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில், பலருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படாத காரணத்தால், நிகழும் மரணங்கள் கொரோனா மரணங்களா? என்பதைக் கண்டறிய முடியாத நிலை உள்ளது.
கொரோனா இறப்பு எண்ணிக்கையில், மெக்சிகோ உலகளவில் 4வது இடத்தில் உள்ளது.
”இறப்புச் சான்றிதழ்கள் முழுவதுமாக தீர்ந்துவிட்டதாக மெக்சிகோவின் பஜா கலிபோர்னியா மாகாணம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஸ்டேட் மாகாணம் மற்றும் மெக்சிகோ சிட்டி நகரத்தில் இறப்புச் சான்றிதழ்கள் குறைவாகவே உள்ளன. போலி சான்றிதழ்களை தடுக்க பத்து லட்சத்திற்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களை அச்சடிக்க முடிவு செய்துள்ளோம்” என்று அந்நாட்டு அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.