சென்னை: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.

சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாநிலம் 12 மாவட்டங்களில் 5,021 கி.மீ. நீளத்திற்கு பாசன கால்வாயை தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.98 கோடி ஒதுக்கப்பட்டு கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கி உள்ளன. இந்த தூர் வாரும் பணிகள் அனைத்தும் மே மாதம் இறுதிக்குள் முடிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 20ந்தேதி (ஏப். 20) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.46 அடியிலிருந்து 107.55 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1385 கன அடியிலிருந்து வினாடிக்கு 2832 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இருப்பு 74.97 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர தொடங்கி உள்ளது.