சேலம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து  நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று ( 25ந்தேதி) காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 104 அடியை தாண்டி உள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும்  தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக,  கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பி உள்ளது. மேலும், தமிழ்நாட்டிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.   கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென  உயர்ந்து வருகிறது. நேற்று வினாடிக்கு 31 ஆயிரத்து 575 கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு  வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 33 ஆயிரத்து 148 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 104.76 அடியாக உயர்ந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 7500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் அது 2500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதுபோல,  கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தொடர்ந்து 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது அணையில் 71.14 டி.எம்.சி.. தண்ணீர் இருப்பு உள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல  தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால், இன்னும் இரண்டு வாரங்களில் அணை முழு கொள்ளவை எட்டும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.