மேட்டூர்

ர்நாடகா கனமழை காரணமாக காவிரி நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7.6 அடி அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால்  கர்நாடகாவில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இங்குள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

எனவே குடகு மாவட்டத்தில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அங்குள்ள பல்வேறு ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் காவிரி மற்றும் பல்வேறு ஆறுகளின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து காணப்படுவதால் தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

எனவே ஒரே நாளில்மேட்டூர் அணை நீர்மட்டம் 7.6 அடி உயர்ந்துள்ளது. அதாவ்து ஒரே வாரத்தில் 26.15 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு நேற்று நீர் வரத்து வினாடிக்கு 68,843 கன அடியாக இருந்தது.  இன்று மேலும் அதிகரித்து 71,777 கன அடியாக உள்ளது.   அணையின் தற்போதைய நீர்மட்டம் 68.91 அடியாக உள்ளது. தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.