சேலம்: வடகிழக்கு பருவமழை மற்றும், கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, நடப்பாண்டில் 3வது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையின் நீர் மட்டம் தனது முழு கொள்ளளவான 120 அடியை அதாவது 93.45 டி.எம்.சி. யை எட்டி உள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. பின்னர் அக்டோபர் மாதம் 11-ந் தேதி அணை மீண்டும் நிரம்பி இருந்தது. இந்தநிலையில் தற்போது பெய்து வரும் மழையால் நேற்று 3-வது முறையாக நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு பருவமழை தீவிரமடைந்து மழை கொட்டியதாலும், கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கிருந்த அணைகள் நிரம்பி காவிரியில் உபரி தண்ணீர் திறக்கப்பட்டதாலும் நடப்பாண்டு முதல்முறையாக கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.
பின்னர் மீண்டும் செப்டம்பர் மாதம் மேட்டூர் அணை 120 அடியை எட்டி இந்த ஆண்டில் 2-வது முறையாக அணை நிரம்பியது. இது சுமார் ஒரு மாதம் காலத்துக்கு 120 அடி என்ற அளவில் நீடித்து வந்தது. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்தநிலையில், தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால், அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 8 ஆயிரத்து 460 கனஅடியாகவும், தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,600 கனஅடியாகவும் இருந்தது. அணையின் நீர்மட்டம் 119.44 அடியாக இருந்தது.இதைத்தொடர்ந்து, அணை நேற்று 3-வது முறையாக 120 அடியை எட்டி நிரம்பியது.
தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரத்து 600 கனஅடியாக இருந்தது. இந்த தண்ணீர் உபரிநீராக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் சுரங்க நீர்மின் நிலையம் வழியாகவும், வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் கால்வாயிலும் திறந்து விடப்பட்டு உள்ளது.