சேலம்: டெல்டா பாசன விவசாயிகளின் பாதுகாவலாக திகழும் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளவான 120 அடியை நெருங்கி உள்ளது. இன்று மாலைக்குள் அணை முழு கொள்ளவை எட்டிவிடும் என்பதால், அதிகாரிகள் ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேட்டூர் அணை நிரம்ப உள்ள நிலையில்,  திருச்சி திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் தயாளகுமார் தலைமையில் அதிகாரிகள் நேரடி ஆய்வு மேற்கொண்ட னர். அப்போது, அணையில் இருந்து வெளியேற்ற வேண்டிய நீர் மற்றும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, செய்தியாளர்களை நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார்  மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக இன்று (டிச. 31) மாலை நிரம்பும் என  தெரிவித்தார். இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் அணை நீர்மட்டம்  119.97 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 2 ஆயிரத்து 516 கன அடியிலிருந்து 2 ஆயிரத்து 875 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக  அணையின் நீர்மட்டம் 119.87அடியிலிருந்து 119.97அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு 93.42 டிஎம்சியாக உள்ளது. (அணையின் மொத்த நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆகும்)

ஏற்கனவே மேட்டூர் அணை  நடப்பு ஆண்டில் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி முதன் முறையாக நிரம்பியது. பின்னர் 2வதுமுறையாக மீண்டும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி இரண்டாவது முறையாக நிரம்பியது.

இதையடுத்து இன்று 3வது முறையாக,  மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப உள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால் இன்று காலை நீர்வளத் துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் சேலம் கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார் உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ் மதுசூதனன் ஆகியோருடன் மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டார்.