சென்னை: நடப்பாண்டில் 4ஆவது முறையாக மேட்டூர் அணை  நிரம்பி உள்ளது. இது டெல்டா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133 அடியாக உயர்ந்துள்ளது. இது மதுரை சுற்றுவட்டார மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் நடப்பாண்டு பரவலாக மழை பெய்து வருவதால், பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளது. இதனால் விவசாயம் மீண்டும் தழைத்தோங்கி உள்ளது.

சமீப நாட்களாக, கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளதால்,  காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து கடந்த மாதம் (ஜூன்) 29-ந்தேதி மாலையில், தனது உச்சபட்ச நீர்மட்டமான 120 அடியை எட்டி இந்த ஆண்டில் முதல் முறையாக நிரம்பியது. அணை வரலாற்றில் 94-வது ஆண்டாகவும் நிரம்பியது.

அதன்பிறகு கடந்த 5-ந்தேதி (ஜூன் 2025), 20-ந்தேதி ((ஜூன் 2025), ஆகிய 2 நாட்கள் மேட்டூர் அணை நிரம்பியது. இந்த நிலையில் தற்போதும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை 119.99 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 19 ஆயிரத்து 65 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரத்து 400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று மாலையில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.

இதன் காரணமாக நடப்பாண்டில் மேட்டூர்  அணை 4-வது முறையாக நிரம்பி உள்ளது. அணை நிரம்பி 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.  அணைக்கு வரும் நீர் இன்று (சனிக்கிழமை) காலை வினாடிக்கு 25,400 கன அடி வீதம் அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 25,000 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும் நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கன அடியும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 7,000 கன அடியும் திறக்கப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133 அடியாக உயர்ந்துள்ளது. இதனால்  வைகை கரையோர மக்கள் பாதுகாப்ப இருக்கும்படி மாவட்ட நிர்வாகம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.  கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடியில் பெய்து வரும் தொடர் மழையால் நேற்று அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அரிதகரித்து உள்ளது. இதன் காரணமாக, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.90 அடியாக உயர்ந்தது. இன்று காலை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து 4711 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் திறப்பு 1867 கன அடியாக உள்ளது. நீர்மட்டம் மேலும் உயர்ந்து 132.95 அடியாக உள்ளது.

ரூல்கர்வ் விதிப்படி முல்லைபெரியாறு அணையில்  இம்மாதம் 30-ந் தேதி வரை 137 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில்,  வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாகவும் நீர்மட்டம் இன்று காலை 65.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1794 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 869 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4818 மி.கன அடியாக உள்ளது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதும், வைகை அணை கரையோரம் உள்ள 5 மாவட்டங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாயம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.