சென்னை: காவிரி , மேகதாது அணை விவகாரம் மற்றும் மேட்டூர் அணை உள்பட நீர் நிலைகள் தொடர்பாக கோட்டையில் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே முதல்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதுடன் கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த பெண்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கான உதவித்தொகைகளையும் விடுவித்து பெரும் வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து நிதிநிலை விவகாரம், தொழில்துறை உள்பட பல்வேறு துறை தொடர்பாக அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதுடன், இன்று நீர்வளத்துறை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண், நீர்வளத்துறை செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்கப்படுவது தொடர்பாக முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, காவிரி நீர், குறுவை சாகுபடி, விவசாயப் பயிர்களுக்கான பயிர் காப்பீடு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய 51-வது கூட்டம் வரும் 28-ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், காவிரி நதிநீர் விவகாரம், மேகதாது அணை விவகாரம் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
[youtube-feed feed=1]