சென்னை: நாளை முதல் மெட்ரோ ரயில் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், விடுமுறை நாட்களில் இரவு 10 மணி வரை மட்டும் இயக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சேவைகள் குறைக்கப்பட்டு, தொற்று குறைந்ததும், மீண்டும் படிப்படியாக சேவைகள் அதிகரிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால்,  தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது, காலை முதல் இரவு வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவையை மேலும் அதிகரிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்து அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ இரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நாளை (17.03.2022) முதல் அனைத்து நாட்களிலும் (திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை) காலை 05:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) மெட்ரோ இரயில் சேவையானது காலை 5.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை இயக்கப்படும். மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கம் போல் நெரிசல்மிகுந்த நேரங்களில் காலை 08.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும்.  மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ இரயில் சேவையானது காலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.