சென்னை: மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையல், அதற்கான நிதி ஆதாரம் குறித்து, ஆசிய முதலீட்டு வங்கி குழுவினர் நாளை நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் செயல்பாட்டில் உள்ள மெட்ரோ ரயில் சேவைக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு உள்ள நிலையில், அதை மேலும் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சி, மாநிலத்தின் பல பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கானஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
அதன்படி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க தமிழ்நாடு அரசு ஆயத்தமாகி வருகிறது. மதுரையில், ரூ. 8500 கோடியில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கி.மீ. தொலைவுக்குமெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மதுரையில் மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் ஒப்பந்தத்தை ஐதராபாத் நிறுவனத்துக்கு கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை 75 நாட்களுக்குள் தயாரித்து வழங்குமாறும் மெட்ரோ ரயில் நிறுவனம் ஐதராபாத் நிறுவனத்திடம் அறிவுறுத்தியிருந்தது.
அதேபோல் கோவை மெட்ரோ ரயில் திட்டமும் ரூ. 9424 கோடி மதிப்பீட்டில் 139 கி.மீ. தொலைவுக்கு 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக 45 கி.மீ. தொலைவுக்கு அவிநாசி முதல் கருமத்தம்பட்டி வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் உள்ள வலியம்பாளையம் பிரிவு வரை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ ரயில் நிர்வாகம் சமீபத்தில் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், துரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை கடனாக வழங்கவுள்ள ஆசிய முதலீட்டு வங்கி நாளை (ஜூலை 3) நேரில் ஆய்வு செய்யவுள்ளது.
கோவை மாநகரில் அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ரூ.10,740 கோடி மதிப்பீட்டிலும், மதுரை மாநகரில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைக்கும் வகையில் ரூ.11,368 கோடி மதிப்பீட்டிலும் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் மூலதனப் பங்களிப்பு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை ஆய்வு செய்ய ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் இந்தியா வருகை தந்துள்ளனர். அவர்கள் நாளை(ஜூன் 3) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 4) கோவை மற்றும் மதுரையில் நேரில் ஆய்வு செய்யவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னர் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.