பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்களில் இருந்து 11000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்நிறுவனத்தில் வேலை செய்யும் 87000 பேரில் சுமார் 13 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்துள்ளது.
2004 ம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனம் துவங்கப்பட்டது முதல் இதுபோன்ற ஒரு பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபடுவது இதுவே முதல் முறை.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் “இது அனைவருக்கும் கடினமான தருணம் என்பதை நான் அறிவேன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நான் வருந்துகிறேன். மேலும் இந்த முடிவுக்கு நான் பொறுப்பேற்கிறேன்” என்று கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக புதிய ஊழியர்களை பணி அமர்த்த தடை விதித்துள்ள இந்த நிறுவனம் அந்த தடையை மேலும் சில மாதம் நீட்டித்துள்ளது.
18 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆட்குறைப்பு நடவடிக்கையால் பல ஆண்டுகளாக பணிபுரியும் அனுபவமிக்க ஊழியர்களே பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர் வருவாய் இழப்பை சந்தித்து வருவதே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.